இலகுலீசர் - தேவர்மலை

 குஜராத்தில் காயாவரோகணம் எனுமிடத்தில் பிறந்த இலகுலீசர் சைவசமயத்தின் ஒருபிரிவான இலகுலீச பாசுபதத்தைத் தோற்றுவித்தவர். இவர் சிவபெருமானின் இருபத்தெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறார். இவரது சிற்பங்கள் வடஇந்தியாவில் குறிப்பாக ஒரிசாவில் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் அடையாளம் காணப்பட்ட இலகுலீசர் சிற்பங்கள் தமிழ்நாட்டில்  விழுப்புரம், திருவண்ணாமலை, பேரூர், அரிட்டாப்பட்டி, தேவர்மலை முதலிய இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.        


இவற்றை ஆய்வுசெய்துவரும்  திரு.வீரராகவன், திரு.சுகவன முருகன் ஆகியோருடன் திருமதி.மங்கை வீரராகவன், முனைவர்.தமிழகன், திரு.வீரசேகரன் ஆகியோருடனும் தேவர்மலைக்குப் பயணமானோம். சென்றமுறை இங்குச் சென்றபோது கோயில் பூட்டியிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது. ஆனால், இம்முறை நம்மை திரு.கரு.இராஜேந்திரன் அவர்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் அழைத்துச் சென்றார்.                        
புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் வழியாக பேரையூர் செல்லும் சாலையில் பேரையூர் விலக்கிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் தேவர்மலை உள்ளது.
சுற்றிலும் தைலமரங்கள் நிறைந்த பகுதியில் அரசு, நாவல், புளிய மரங்கள் சூழ்ந்த வயல் பகுதியில் அழகாகக் காட்சியளிக்கிறது இம்மலை. முன்மண்டபத்துடன் கூடிய குடைவரையைக்கொண்ட இக்கோயிலின் வெளியே நாவல் மரத்தடியில் ஒரு மேடையின் மேல் இரண்டு நந்திகள் கோயிலை நோக்கி உள்ளன. சற்று நேரம் அம்மேடையில் அமர்ந்து சுவையான நாவற்பழங்களை தின்றுவிட்டு சிறிய வாயிலின் வழியே மண்டபத்திற்குள் நுழைந்தோம்.
முன்மண்டபத்தினுள் சிறிய பலிபீடமும் நந்தியும் உள்ளன. இம்மண்டபத்தினுள் தேவநாயகி அம்மன் எழுந்தருளுகிறார்.கிழக்கு மேறறைறை்காக அமைந்த பாறைச்சரிவில் குடையப்பட்ட இக்குடைவரைக் கோயிலின் இடப்புறம் விநாயகர்  சிற்பமும் வலப்புறம் இலகுலீசர் சிற்பமும் வடிக்கப்பட்டிருக்கின்றன. கருவறையில் சதுர ஆவுடையாருடனும், உருளைப்பாணத்துடன் இலிங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.                                  
கருவறைக்கு வெளியே புலத்தியர், அகத்தியர் என்றழைக்கப்படும் முனிவர்கள் இறைவனை நோக்கி கையைக்காண்பித்தவாறு நின்றநிலையில் உள்ளனர்.
வலது கோட்டத்தில் இலகுலீசர் சிற்பம் வலதுகாலை ஊன்றி இடதுகாலை மடக்கி வைத்தவாறும், இடையில் அரையாடையுடனும் மிக அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. சிற்றாடையில் முடிச்சும் காணப்படுகிறது. கழுத்தில் ஒற்றை ஆரத்தில் உத்திராட்ச மாலையும் மார்பில் முப்பிரி நூலையும் அணிந்துள்ளார். வலக்கையில் இலகுலம்(தடி) ஏந்திக்கொண்டு இடக்கையில் சின்முத்திரை காட்டிக்கொண்டு கையைத் தொடையில் வைத்துள்ளார். தடியில் படமெடுத்த நிலையில் பாம்பு காணப்படுகிறது. புஜங்களில் வாகுவளையங்களும், முன்கைகளில் காப்புகளும் காட்டப்பட்டுள்ளன. காதுகளில் ஓலைச்சுருள்கள் உள்ளன. தலைமுடி ஜடாபாரத்துடன் குடுமிபோல் கட்டப்பட்டு பூச்சூட்டப்பட்டுள்ளது.
இச்சிற்பத்தை ஆய்வுசெய்த டாக்டர் இரா.கலைக்கோவன், இது இலகுலீசர் சிற்பம் அன்று என மறுக்கிறார்.   
மண்டபத்திற்கு கிழக்கே குறும்ப நாயனாரின் சமாதி உள்ளது. சமாதிக்கு எதிரேயுள்ள பாறையில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தக் கல்வெட்டும் காணப்படுகிறது.

- பாலா பாரதி


Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....