உன்னம் - முன்னம் - முன்னை

 

வெள்ளிமலை வில்லியாரைப் பார்க்கப் போயிருந்தபோது வில்லியாரின் நடுகல்லை அவ்வூரின் இடும்பர் கோயிலில் பார்த்தோம். இரண்டு நடுகற்கள் கோயிலில் எதிரேயுள்ள மரத்தடியில் இருந்தன. அம்மரத்தையும் இச்சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையையும் பார்த்து வியந்து போனோம். தொல்காப்பியரும், சங்கப்புலவர்களும் விவரித்தக் காட்சி நமது கண்முன்னே விரிந்திருந்தால் வியப்பு ஏற்படாமல் இருக்குமா?
சற்று விரிவாகப் பார்ப்போமா….
தற்போது நாட்டுமக்களால் 'முன்னை' என வழங்கப்படும் இம்மரம் இலக்கியங்களில் 'உன்னம்' எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. உன்னம் என்பது சிறிய இலைகளுடன் பொன்போன்றப் பூவையும் கொண்ட ஒரு மரம் அகும். பண்டைத்தமிழ் மறவர் போருக்குச் செல்வதற்கு முன்பாக 'நிமித்தம்' பார்ப்பர். நிமித்தம் பார்த்தாலென்பது தற்போதைய வழக்கில் 'சகுனம்' பார்த்தலாகும்.
போருக்குத் தயாரான வீரர்கள் ஏதேனும் நற்செய்திகள் காதில் விழுந்தாலோ, நல்ல சகுனங்கள் தென்பட்டாலோ போரில் வெற்றிக்கிட்டும் என நம்புவர். இத்தகைய நிமித்தம் பார்த்தலில் ஒன்றுதான் இந்த உன்னம் பார்த்தல். போருக்குச் செல்வதற்கு முன் முன்னை மரத்திற்கு முன்பாக நின்று நிமித்தம் பார்ப்பர். மரம் வாடாது செழித்திருந்தால் தமக்கு வெற்றியெனவும், வாடினால் வெற்றியில் சிக்கலெனவும் நிமித்தம் கொள்வர்.
தொல்காப்பியத்தில் வெட்சித்தினைத் துறைகளுள் ஒன்று 'உன்னநிலை'.
“ஓடா, உடல்வேந்து அடுக்கிய உன்ன நிலையும்”
புறநானூறு 5-8
ச.சோ. பாரதியார்: பின்வாங்காது போரிடும் வேந்தன் வெற்றியை சார்த்து வகையால் உன்ன மரத்தில் நிமித்தங்கொள்ளும் உன்ன நிலையும். குறிபார்பவர்கள் தம்மன்னனுக்கு ஆக்கம் எனில் இம்மரக்காடு தழைவதையும் கேடெனில் அழிவதையும் ஆகிய கடவுட்தன்மையுடையதாக இம்மரத்தை பார்த்தனர்.
இளம்பூரணர் : உன்னம் என்பது மரம். அதுதான் நாட்டகத்துக் கேடுவருங்கால் உலறியும் வாராத காலம் குழைந்தும் நிற்கும்.
‘தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
புன்கால் உன்னம் சாய'
பதிற்றுப்பத்து40 - 16 – 17
நார்முடிச் சேரல் என்னும் சேரவேந்தன் போரில் வெற்றிபெற நல்நிமித்தம் பார்த்த பகையரசர்களுக்கு உன்னமரம் கரிந்து காட்டியதாம்.
‘பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப் புல்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ’
(60 – 5 - 6)
பொன்போலும் பூவினையும் சிறிய இலைகளையும் கொண்ட உன்னமரத்திற்கு நெடுஞ்சேரலாதன் பகைவனாம். பகைவர்களுக்கு அவர்களின் தோல்வியை முன்னமே குறிப்பால் கூறிவிடுவதால், நெடுஞ்சேரலாதன் உன்னமரத்தின் பகைவன் எங்கள் மன்னன் என்கிறார் புலவர்.
இவ்வாறு நிமித்தம் பார்ப்பவர்களுக்கு வெற்றியைப்பற்றி முன்பாகவே உணர்த்திவிடுதலால், உன்னம் பின்நாட்களில் முன்னமாக மாறியிருக்க வேண்டும்.
முன்னம் தற்போது நாட்டுமக்களால் முன்னை என அழைக்கப்படுகிறது. வழக்கில் கூறும்போது 'முன்னமரம்' என்கிறார்கள்.
வெள்ளிமலையில் வில்லியார், நாயக்கர் ஆகிய இருவரின் நடுகல் சிற்பங்களும் போருக்குத்தயாரான நிலையில் கையில் வில்லுடன் முன்னை மரத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளன. இக்காட்சி போருக்குமுன் முன்னை மரத்தில் நிமித்தம் பார்க்கும் காட்சியை ஒத்திருந்ததால் நாம் வியந்துபோனோம்.
அங்கிருந்தவர்களிடம் இம்மரத்தின் பெயரைக் நாம் கேட்க அனைவரும் முன்னை என்று மிகச்சரியாகக் குறிப்பிட்டனர். நகர்பகுதிகளில் இதுபோன்ற பெயர்கள் மறைந்துவிட்டாலும் கிராமங்களில் பழைய பெயர்கள் வழக்கில் அழியாமல் உள்ளது மகிழ்வானது.
-பாலா பாரதி



Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....