சுமைதாங்கிக்கல்

 " சுமைதாங்கி சாய்ந்தால்...

சுமை என்ன ஆகும்...
மணி தீபம் ஓய்ந்தால்...
ஒளி எங்கு போகும்... "
காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கைக் காண கல்லணை சாலையில் சென்றிருந்தோம் உத்தமர்சீலியில் தரைப்பாலத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. காவிரியிலிருந்து தரைப்பாலம் வழியாக கொள்ளிடத்திற்கு, அங்கிருந்த வாழைத்தோப்புகளை மூழ்கடித்தபடி சென்றுகொண்டிருந்ததை மக்கள் கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்க நாமும் அதற்குமேல் செல்ல முடியாததால் திரும்ப முனைந்தபோதுதான் அதைக் கவனித்தோம். சாலையோரமாக இருந்த அந்த சுமைதாங்கிக்கல் நம்மை ஈர்க்கக் காரணம் அது வண்ணம் பூசப்பட்டு பெயிண்டால் எழுதப்பட்டிருந்ததுதான்.
உத்தமர்சீலியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மனைவி லீலாவதி என்பவருக்காக ஏற்படுத்தப்பட்டது என்ற செய்தியைத் தாங்கியபடி நின்று கொண்டிருக்கிறது இக்கல். பிற்காலத்தில் தோன்றியிருந்தாலும், அண்மைக் காலங்களில் அருகிவரும் இப்பண்பாட்டின் கடைசி எச்சங்களைப் பார்க்கும்போது மனசு சற்றே கனக்கிறது.
அங்குள்ளவர்களிடம் கேட்டபோது லீலாவதி அவர்களின் மகன் இராஜரத்தினம் இக்கல்லை பராமரிப்பது தெரிந்தது. அவரையும் அவர் மனைவியையும் அவர்கள் வீட்டில் சந்தித்தோம். அவர்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் வந்தால் இந்தக் கல்லுகிட்ட வந்து நின்னு மனசுல வேண்டிக்குவாங்கலாம், வேண்டுதல் நிறைவேறியவுடன் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவாங்களாம்.
" எங்க மாமனார் இறந்ததுக்கு பிறகு, கல்லண ரோடு போடுறப்போ இந்தக்கல்ல எடுத்து வயக்காட்ல போட்டுட்டாங்க, ஒருநாள் என் வீட்டுக்காரர் கனவுல அவுங்கம்மா வந்துதாங்க, அதுக்கப்புறமா அதத்தேடி எடுத்து நட்டுவெச்சி சாமியா கும்பிடுறோம்."
இராஜரத்தினத்தின் மனைவி நினைவு கூர்ந்தார்.
" எங்கள மாதிரியே பச்சாப்புள்ள வாத்தியாரும் அவரோட முதல் மனைவிக்கு கல்லு நட்டு கும்புடுறார்"
என அவர் மேல்தகவல் கொடுக்க, வாத்தியாரைப் பார்க்கப் போனோம். பச்சாபுள்ள வாத்தியார் என அவ்வூர்காரர்களால் அழைக்கப்படும் நாகராஜ் வாத்தியார் தனது முதல் மனைவி காமுவுக்கு நட்ட சுமைதாங்கிக் கல்லும் இன்னும் பராமரிப்பில் உள்ளது. அவர் வீட்டில் இல்லை, அவரின் இரண்டாவது மனைவி நாட்டுக்கோழியை உரித்துக்கொண்டே காமுவின் சோகக்கதையை சொல்ல, கனத்த இதயத்துடன் எழுந்த நம்மை
'சாப்டுட்டுப் போப்பா...'
என்றழைத்தது சாப்பிட்ட நிறைவைக் கொடுத்தது.
இந்த நினைவுக்கற்கள், குழந்தைப்பேற்றின்போது, இறந்துவிடும் தாய்மார்களுக்கு அவர்களின் தந்தையாலோ, கணவனாலோ ஏற்படுத்தப்படுவதாகும். சுமைதாங்கிக்கற்கள் அனைத்துமே கர்ப்பிணிகளுக்கு அமைக்கப்பட்டவை இல்லையென்றாலும் பெரும்பாலானவை அவர்களுக்காக அமைக்கப்பட்டவையாகவே தெரிகின்றன.
பல கிராம சாலைகளில் இன்றைக்கும் இவற்றைப் பார்க்கலாம். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள், அந்த ஊருக்கு வருபவர்கள் தாங்கள் கொண்டுவரும் சுமையை இறக்கிவைக்கவும், சற்று இளைப்பாறவும் அமைக்கப்பட்டவை இவை. பெரும்பாலும் நடைபயணமே மேற்கொண்டபோது தேவைப்பட்ட இவை, குறைந்து வருவதற்கு தேவையின்மையும் காரணமாகும்.
திரும்பி வரும்போது அக்கற்களைக் கடந்தபோது
" சுமைதாங்கி சாய்ந்தால்...
சுமை என்ன ஆகும்..."
சிவாஜி நடித்த படப்பாடல் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
ஒவ்வொரு கல்லுக்குப் பின்னும் ஒவ்வொரு சோகக்கதை இருக்கும்.
எளிய மக்களின் வரலாற்றைத் தாங்கி நிற்கும் இக்கற்களை சாலைவிரிவாக்கத்தின்போது அழிந்துவிடாமல் செய்தாலே அறம் செய்தவர் ஆவீர்.
- பாலா பாரதி


Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....