திருச்சியில் நீர்நாய்கள்... (The Smooth Indian Otter)


           சனிக்கிழமை இரவு நண்பர் சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது. ‘சார் நாளக்கி பேர்ட் வாட்சிங் போலாமா?' என்றுக் கேட்டவரிடம் சரியென உடனே ஒப்புக்கொண்டதற்கு வேறொரு காரணமும் இருந்தது, பறவைகளைப் படம்பிடிப்பதற்காக NICKON P900 கேமரா அன்றுதான் வாங்கியிருந்தேன். கேமராவுடன் பறவைகள் கையேடு, பைனாகுலர், குறிப்பேடுகளுடன் மறுநாள் காலை 5.30 மணிக்குக் கிளம்பிவிட்டேன்.

சிவாவுடன் நண்பர் இராஜகோபாலும் வந்திருந்தார், அவர் புகைப்படக்கலைஞர் எனவே நமக்கு புகைப்படமெடுப்பதற்குக் கற்றுக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். மூவரும் திருச்சி ஆட்சியாளர் அலுவலகத்திற்கு பின்புறமுள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலின் வழியே பயணம் செய்து பறவைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தோம்.
புறவைகளை கூண்டில் பார்க்காமல் அதன் இயற்கைச் சூழலிலேயே பார்ப்பது மகிழ்வானது. மயில், புறா, செம்போத்து, புல்புல், ஆள்காட்டி, தேன்சிட்டு, கானாங்கோழி, பனங்காடை, மீன்கொத்தி, குயில், முதலிய பறவைகளை அங்குப் பார்க்க முடிந்தது.
கால்வாயின் மேலேயுள்ள பாலத்தில் நடந்துகொண்டிருந்தபோது…

“ஆட்டர், ஆட்டர்”

என்று இராஜகோபால் சார் கத்த…
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் ஓடிச்சென்று பார்த்தால் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது அதில் கருப்பாக ஒரு உருவம் தண்ணீருக்குள் மூழ்குவதும் மேலே வருவதுமாக இருந்தது. சிறிது நேரத்தில் அருகிலிருந்த பாறையில் ஏறிநின்றுக்கொண்டு ஓய்வெடுக்கும் போதுதான் அதன் முழு உருவமும் தெரிந்தது. குட்டையான நான்கு கால்களுடன் பெரிய நாயின் அளவுடன், நீண்ட வாலைக் கொண்டதாக இருந்தது. நீண்ட மீசை மயிர்களுடன் காணப்பட்ட அவ்வுருவம் எங்களைப் பார்த்ததும் மீண்டும் தண்ணீருக்குள் சென்று மறைந்தது. அது ஆட்டர் (RIVER OTTAR) என்றழைக்கப்படும் நீர் நாய் எனத் தெரிந்ததும்,
“என்ன நம்ம திருச்சியிலே நீர் நாய் உள்ளதா”
என வியப்பாகக் கேட்டுக்கொண்டோம். சற்று நேரம் கழித்து அது மீண்டும் வந்தது. அது மீன்பிடிப்பது நீரில் விளையாடுவது போலிருந்தது. பாறைக்கு வருவதும் மீண்டும் தண்ணீருக்குள் போவதுமாக இருந்ததைப் படமெடுத்துக் கொண்டோம்.

வீட்டுக்கு வந்தவுடன் நண்பர்களிடம் கேட்டும், இணையத்தில் படித்தும் நீர் நாய்களைப்பற்றி அறிந்து கொண்ட தகவல்கள் வியப்பாக இருந்தது.
நீர்நாய் ஊன்உன்னி வகையைச் சேர்ந்த பாலூட்டியாகும். ஆற்று நீர்நாய்கள், கடல் நீர்நாய்கள் என்று இவற்றில் இரண்டு வகைகள் உண்டு. மேலும் இவற்றைப் பதின்மூன்று வகை சிற்றினங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

இவை நீரில்நீந்தும், தலைகுப்புற டைவ்அடிக்கும் வழக்கம் கொண்டவை. தண்ணீருக்குள் 8 நிமிடங்கள்வரை மூழ்கி இருக்கும் திறன்கொண்டவை. நிலத்தில் மணிக்கு 29 கி.மீ., வேகத்தில் நடக்கும். இதனுடைய வாழ்நாள் 8 முதல் 9 ஆண்டுகள் ஆகும். பிறந்து 2 ஆண்டுமுதல் குட்டிகள் போட தொடங்கும். பிறந்து 2 மாதத்தில் நீரில் நீந்தத் தொடங்குகிறது.

கடல், ஆற்றோரம், முகத் துவாரப்பகுதிகளில் மட்டுமே வாழும் இந்தப் பாலூட்டிகள் 14 முதல் 45 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கும். ஆற்று நீர்நாய்கள், கடலில் வாழும் நீர்நாய்களோடு ஒப்பிடும்போது அளவில் சிறியவை. உடலின் மேல் போர்வை போல் வளர்ந்துள்ள ரோமமும், தடிமனான தோலும் இவற்றின் சிறப்பாகும். இவை பெரும்பாலும் நீரில் தனது வாழ்நாளைக் கழித்தாலும், தரைப்பகுதிகளில் நடந்தும் தனது பொழுதுகளை போக்கும்.

இவை மீன்களை வேட்டையாடும். ஓடுடைய உயிரினங்களைக் கொல்ல பாறைகளை உபயோகிக்கும். பெரிய பாறைகளைக் கூட உருட்டிக் கொணர்ந்து தனது இருகால்களால் பற்றி ஓட்டின் மேல் போட்டு உடைத்து விடும்.

தான் வாழ்வதற்கு என தனிப்பட்ட அமைப்போ, படுக்கையோ, கூட்டு அமைப்போ ஏற்படுத்திக் கொள்ளாது. வாழ்நாள் முழுதும் தண்ணீரில் மிதக்கும். மரங்கள், செடி புதர்களைத் தற்காலிக இருக்கைகளாக அவ்வப்போது மட்டும் அமைத்து, அதன் மேல் படுத்துறங்கும். குளிர்நீரோ, குளிர்காலங்களோ இதன் உடல் நிலையைப் பாதிக்காதவாறு தோல் அமைப்பு அமைந்துள்ளது. இவை அடிக்கடி தனது நாவால் தனதுரோமங்களை நக்கியும், முகத்தால் கோதிவிட்டும் பதப்படுத்திக் கொள்ளும்.
உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் தனித்து இயங்கும். உதாரணமாக இதன் காது மடல்கள், பாட்டிலின் மூடி போல் மூச்சடைத்து தண்ணீரில் மூழ்க தனது மூக்கின் துவாரங்களை முன் தசையால் மூடிக் கொள்ளும். இதனால் 5 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கிக் கொள்ள முடியும்.

ஓய்வு நேரங்களில் தனக்குப் பிடித்தமான உணவை மல்லாந்து படுத்து உண்ணும். அப்போது அடிவயிற்றுப் பகுதியை, சாப்பாடு மேசை போல், உணவுகளைப் பிரித்து அதன் மேல் வைத்து மிக மெதுவாக நீரில் மிதந்தவாறே உண்ணும். நான்கு கால்களை உள்மடக்கிக் கொள்ளும். வால்பகுதி மட்டும் அசைந்து கொடுத்துத் துடுப்பு போல் இயங்கிக் கொண்டிருக்கும். அவ்வப்போது முழு உடலையும் சுருக்கிப் பந்து போல் ஆக்கிக் கொள்ளும்.

இவ்வாறான செயல் அதிக அலை கொண்ட நேரங்களில் கடலில் இதன் உடல் மூழ்காதவாறு பார்த்துக் கொள்கிறது. இதன் தோல், காற்றை உறிஞ்சும். தவிர நுரையீரல், உடல் எடையைப் போல், இரண்டரை மடங்கு காற்றை உறிஞ்சும். இதனால் பல மணி நேரம் இவற்றால் ஒரு பலூன் போல் நீரில் மிதக்க முடிகிறது. இது நீர் நாய்களுக்கு மட்டுமே உள்ள சிறப்புக் குணம். இந்தக் காற்றே இவை தரைப் பகுதியில் உலாவும்போது கால் பாதங்கள் வழியாக வெளியேறி உடலைச் சூடேற்ற உதவுகிறது.

இவற்றின் பார்வைத் திறனும், செவித்திறனும் மிகநுட்பமானவை அல்ல. 32 பல் கொண்ட இதன் வாயமைப்பால் அதிவேகத்துடன் இரையைக் கடித்துக் குதறும். இதன் உணவு தேடும் பழக்கமும் விசித்திரமானது, சூரிய உதயத்திற்கு முன்பே உணவு வேட்டையைத் துவங்குகிறது. பல மணி நேரம் வேட்டையில் ஈடுபடும். இவை தனது உடல் எடையில் பாதியளவு உணவு கிடைக்கும் வரை தேடலில் ஈடுபடும். இவ்வாறு அதிகளவு உணவை உண்பதால் மீனவர்களுக்குப் பரம எதிரியாக திகழ்கின்றன. தவிர கரடி போன்ற மீன் உண்ணும் பிராணிகளும் இவைகளை வெறுக்கின்றன.

தோல் நோயால் பாதிக்கப்படாத இவை ஒருவித பாக்டீரியாவால் நோய் தாக்குதலுக்கு ஆளாகிறது. குறிப்பாகக் கடலில் எண்ணெய் மாசு, விஷப் பொருட்களைக் கலத்தல், மாசு படந்த நீர் இதன் உடலில் படிதல் போன்றவை இவற்றின் பார்வைக்கும் சிறு நீரகம், குடல் பகுதிகளுக்கும் அதிக பாதிப்புகளை உருவாக்குவதோடு சில சமயம் இறப்பிற்கும் வழிவகுக்கின்றது. ஆண் தனது எல்லையை நிர்ணயித்துக் கொண்டு தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொள்ளும். எனினும் ஒவ்வொரு நீர்நாயும் தனித்தே வாழ விரும்புகின்றன. தேவை கருதி மட்டுமே ஒன்றை ஒன்று அணுகும்.

ஆறு முதல் ஏழு மாத கர்ப்பத்திற்குப் பிறகு ஒரே ஒரு குட்டியை ஈனும். அரிதாக இருகுட்டிகளை ஈனும். ஈன்ற குட்டிகளைத் தாய் தன் நெஞ்சோடு அணைத்தவாறே பேணிப் பாதுகாக்கும். வேறு எங்கேனும் செல்ல நேர்ந்தால், நீண்ட கொடிகளை அறுத்துக் கொண்டுவந்து குட்டியைச் சுற்றி ஒரு போர்வைப் போல போர்த்தி மறைவுப் பிரதேசத்தில் வைத்துவிட்டுச் செல்லும். மிகக் குறுகிய கால இடைவெளியில் திரும்பிவிடும். நான்கு வருடங்கள் வரை தாயின் பராமரிப்பில் குட்டிகள் இருக்கும்.

கனடாவில் நீர்நாய் வேட்டை மூலம் வருமானம் ஈட்டும் நபர்கள் அதிகம். ஐரோப்பிய ஒன்றியம் நீர்நாய் வதையைத் தடை செய்து இறைச்சியைக் கொள்முதல் செய்யவும் தடைவிதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவை உறுப்பினர்கள் இனி பாராளுமன்ற உணவகத்திலேயே நீர்நாய்க்கறி உணவு விற்க வகை செய்யும் தனி சட்ட மசோதாவைக் கொண்டுவந்தனர். இதைப் பாராளுமன்றமும் அங்கீகரித்தது. இதனால் 2,70,000 -க்கும் மேற்பட்ட நீர்நாய்கள் கொல்லப்பட்டனவாம்.

பத்து முதல் பதினைந்து வருடங்கள் வரை உயிர் வாழும் இவை 1800 முதல் 1900 க்குள்தான் அதிக வேட்டைக்கு ஆளானதாக ஐ.நா.குறிப்பு கூறுகிறது. பின்னர் அவசர அவசரமாக அழிவின் விளிம்புப் பட்டியலில் இணைக்கப்பட்டதாம். குறிப்பாக, நாகரீகமானவர்கள் உலக உயிரியங்களைக் காக்கப் பிறந்தவர்கள். இயற்கையை நேசிப்பவர்கள் என தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் அமெரிக்கர்கள்தான் இவைகளைக் கொன்றொழித்து அழிவுப் பட்டியலில் இடம்பெறச் செய்து பெருமைப்பட்டவர்கள். (நன்றி:உயிர்மை.காம்,உயிர்மை பதிப்பகம்)

திருச்சியில் நீர்நாய்கள் பதிவின் தொடர்ச்சி...

சங்க நூல்களில் நீர்நாய் பற்றி பல இடங்களில் செய்திகள் காணப்படுகின்றன. தற்காலத்தில் நீர்நிலைகளில் மிக அரிதாகக் காணப்படும் இவ்விலங்கை சங்கப் புலவர்கள் கண்டு தெளிந்து பாடியுள்ளனர். நீர்நாய் வாழும் சூழ்நிலையைச் சங்கப் புலவர்கள் தெளிவாக விலங்கு நூலார் கூறியதை ஒத்தே சொல்லியிருப்பது வியப்பைத் தருகின்றது. சங்க நூல்களில் கீழ்வரும் பாடல்கள் நீர்நாயைப் பற்றிக் கூறுகின்றன.

“சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்
தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும்”
                                                                                                    - அகம், 6.

“பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து
வாளை நாளிரை தேரும் ஊர”
                                                                                                     - அகம், 381
“வாளை வாளின் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்”
                                                                                              - நற்றிணை, 390.

மேலே காட்டப்பட்ட பாடல்களில் கூறப்பட்ட நீர்நாய் எது என்பதை ஆராயவேண்டும். விலங்கு நூலார் மூன்று வகை நீர் நாய்கள் (The common Otter, The smooth Indian Otter, The clawless Otter) இந்தியாவில் காணப்படுவதாகக் கூறுவர். இந்த மூன்றுவகை நீர் நாய்களும் தென்னிந்தியாவிலும் காணப் படுகின்றன. குளிர்மிகுந்த மலைகளின் குன்றுகளில் உள்ள அருவிகளிலும் குளங்களிலும் ஒருவகை நீர்நாய் (The common Otter) வாழ்கின்றது. சங்க நூல்களில் கூறப்பட்டது இதுவன்று. நகமற்ற நீர்நாய் (clawless Otter) உண்டு. இது நீலகிரி, குடகு, பழனி மலைகளில் உயர்ந்த சரிவுகளில் காணப்படுகின்றது. இதுவும் சங்க நூல்கள் கூறும் நீர்நாய் அன்று. இவை இரண்டையும் விலக்கினால் மிஞ்சுவது விலங்கு நூலார் கூறும் ‘The smooth Indian Otter’ என்பதே. இதுவே சங்க நூல்கள் கூறும் நீர்நாய் என்று உறுதியாகக் கூறமுடியும். இந்த நீர்நாய்தான் சமவெளிப் பகுதிகளில் காணப்படுவது. சங்கநூல்களில் பேசப்படும் நீர்நாய் மருதம், நெய்தல் சூழ்நிலையான சமவெளிப் பகுதியிலேதான் கூறப்படுகின்றது. மலையிலும் குன்றிலும் கூறப்படவில்லை.

இந்த நீர்நாய் விலங்குநூலார் கண்டபடி பெரியய ஏரி குளங்களின் கரைகளிலும், ஆறு, கால்வாய் அருகிலேயும் வாழ்வது.(It lives by the margins of lakes and streams and in large tanks and canals. It hunts in flooded fields, creeks and estuaries and on the coast goes out after fish into the open sea) மற்றும் நீர்நிறைந்த வயல்களிலும் கடற்கழியிலும் வாழும் இயல்புடையது. இந்த நீர்நாய் வாழும் இடங்களாக விலங்கு நூலார் கூறிய இடங்களிலேயே வாழ்வதாகச் சங்கப் புலவர்கள் நீர்நாயைக் குறித்துப் பாடியிருப்பதால் சங்க நூல்கள் கூறியுள்ள நீர்நாய் ‘The smooth Indian otter’ என்பதில் ஐயமில்லை.

சிலப்பதிகாரத்தில் இந்த நீர்நாயைப் பற்றிக் கூறும் செய்தி இன்னும் உறுதிப் படுத்துகிறது. பொய்கையிலே (lakes) இது வாழ்வதை அகம். 336,386ஆம் பாடல்களும், ஐங்குறுநூறு 63, நற்றிணை 390 ஆகிய பாடல்களும் குறிப்பிடுகின்றன. தண்கயத்தில் (Tank) காணப்பட்டதைப் புறம் - 283 ஆம் பாடல் குறிப்பிடுகின்றது.

“வயலுழைப் படர்குவ மெனினே யாங்குப்
பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி
நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயிற்
கலங்கலு முண்டிக் காரிகை யாங்கண்”
                                                                   சிலப்பதிகாரம் - நாடுகாண்காதை - 77 - 81

குளத்திலே கயல்மீன்களை ஒட்டிய நீர்நாய் வாளை மீனைக் கௌவ அது தப்பித்து மலங்கு துள்ளுகின்ற வயலில் குறுக்கே பாயும் என்று சிலம்பு கூவது கண்டதைக் கண்டவாறே கூறும் செய்தியாகத் தெரிகின்றது. நீர்நாய் கயல்மீனையும் வாளை மீனையும் வேட்டையாடுவது கண்டு கண்ணகி கலங்குவாள் என்று கூறப்பட்டுள்ளது.

நீர்நாயின் உடல் வழவழப்பாய்க் கருமையாய் (Darkish) கருமை கலந்த செம்பழுப்பாய் இருக்குமென்பர். இதையே ‘இரும்போத்து’ என்று அகம் கூறுகிறது. இதன் முகத்தில் மூக்கிற்கு மேலே மயிர் ஒரு வரியாக ஒழுங்காகக் காணப்படும். இதன் காரணமாகவே ‘வரிப்புற நீர்நாய்’ என்று குறுந்தொகை கூறுகின்றது. மீனைக் கடித்துத் தின்னவும், வழுக்கித் தப்பாமல் கௌவவும் நீர்நாய்க்குத் தடித்த கூரிய பல் உண்டு. “வெள்ளெயிற்று நீர்நாய்” என்று அகம் கூறும், நீர்நாய் இரவுக் காலத்தில் மீன்களை வேட்டையாடும் விடிய விடிய மீன்களை வேட்டையாடும் என்று விலங்கு நூலார் கூறுவர். இரவுக் காலத்தில் நீர்நாய் மீன் வேட்டையாடுவதைக் காண்பது எளிதல்லவானதால் சங்கப் புலவர்கள் விடியற்காலையில் இவை வேட்டையாடுவதையே பெரும்பாலும் கண்டிருக்கின்றனர். அதன் காரணமாகவே ‘வாளை நாளிரை’ நீர்நாய் பெறுவதாக எல்லாப் பாடல்களிலும் கூறியுள்ளனர்.

காலை உணவை நாளிரை என்றனர். வாளை மீனைப் பெரிதும் உணவாக உண்டதாகச் சங்கப் புலவர்கள் கூறியது உண்மைச் செய்தி, நீர்நாய் வேட்டையாடும்போது தன் உணவுத் தேவைக்கு மீறி மீன்களைக் கொன்றுவிடும் கொடிய தன்மையுடையது. இவை கூட்டமாகவும் மீன்களை வேட்டையாடுவதுண்டு. மீன்களை வேட்டையாடும்போது நீரைக் கலக்குவதுண்டு. மீன்களை அலைக்கழிப்பதுமுண்டு. இதை “வாளையோடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்” என்று அகப்பாடல் கூறுவதை நோக்குக. “ஒண் குரலித் தண்கயங் கலங்கி’ என்று புறநானூறு கூறுவதைக் கவனிக்கவேண்டும்.

நீர்நாய்கள் நீர்ப்பரப்பில் வழுக்கி விளையாடுதலை (water sliding) விலங்கு நூலறிஞர்கள் கண்டு எழுதியுள்ளனர். நீர்நாய்கள் குடும்பமாக இத்தகைய சறுக்கு விளையாட்டில் ஈடுபடுமாம். இக்காட்சி மிக அழகானதென்பர். இதே முறையான ஒருகாட்சியைக் கம்ப ராமாயணம் கூறுவது வியப்பைத் தருகின்றது.

“வலி நடத்திய வாள் என வாளைகள்பாய
நிலை நடத்திய திரைதொறும் உருள்வன நீர்நாய்
கலிநடக் கழைக் கண்ணுளர்என நடம்கவின
பொலிவு உடைத்து எனத்தேரைகள்
புகழ்வனபோலும்"
                                                                                                        -கம்ப - கிட் - பம்பா. 22.

திரைதொறும் உருள்வன நீர்நாய் என்றும் அக்காட்சி கழைக்கூத்தர் சறுக்குவது போலத் தேரைகள் கருதின என்று கம்பர் கூறியுள்ளதிலிருந்து நீர்நாய்களின் வழுக்கும் விளையாட்டை நன்கு தெரிந்தே கம்பர் பாடினரென்று கருதலாம். சங்க நூல்களில் நீர்நாயின் ஆணை ‘இரும்போத்து’ என்றும் பெண்ணைப் ‘பிணவு’ என்றும், குட்டிகளைப் ‘பறழ்’ என்றும் கூறியுள்ளனர்.

நீர்நாய் என்று அழைக்கப்பட்டாலும் நாய்க்கும் நீர்நாய்க்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இந்திய மொழிகளில் பலவற்றிலும் நீர்நாய் என்ற பொருளிலேயே பெயர் வழங்குவது தமிழ்ப் பெயரின் அடிப்படையிலோ திராவிடமொழிப் பெயரின் அடிப்படையிலோ இருப்பதாகத் தெரிகின்றது. மீன்களை வேட்டையாடுவதன் காரணமாக நீர்நாய் எனப்பட்டதோ என ஐயம் எழுகிறது. நீர்நாய்க் குட்டிகளை இளம்பருவத்தில் தனிப்படுத்தி வளர்த்தால் நாயைப் போலவே மனிதனின் பின்னர் வருமாம். நீர்நாயைக் கன்னடத்தில் ‘நீருநாய்’ என்றும், தெலுங்கில் 'நீரு குக்கா’ என்றும், இந்தியில் ‘பானிகுத்தா’ என்றும் ஒரே பொருளில் வழங்குவர். தமிழ் நாட்டில் சிலவிடங்களில் ’மீனாய்’ என்று இதை அழைக்கின்றனர்.
(திரு. பி.எல் சாமி அவர்கள் எழுதிய‘சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்’ எனும் புத்தகத்திலிருந்து)

பாலா பாரதி






Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....