பழுவேட்டரையர்கள்

 பழுவேட்டரையர்கள் - பழுவூர் அரசர்கள்

பழுவூரிலுள்ள பழுவேட்டரையர்களின் கோயில்களுக்கு அண்மையில் சென்றுவரும் வாய்ப்புக் கிடைத்தது. அரியலூர் மாவட்டம் திருச்சி- ஜெயங்கொண்டம் சாலையில் திருச்சியிலிருந்து ஐம்பத்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது பழுவூர்.பழுவேட்டரையர் மரபின் கலைக்கொடைகளான இக்கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் காலத்திற்குச் சவால் விட்டு கம்பீரமாக நிற்கின்றன.
தமிழகத்தில் பொ.ஆ 880 இல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் திருப்புறம்பியம் போர் சோழப் பேராட்சிக்கு அடிகோலியது என்பர். விஜயாலயர், முதலாம் ஆதித்தர், முதலாம் பராந்தகர் போன்ற சோழ வேந்தர்கள் ஆட்சி எல்லைகளை விரிவாக்கும் பணியில் முனைந்து ஈடுபட்டனர். அப்பணியில் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து உதவிய அரச மரபினர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பழுவேட்டரையர்களாவர்.
தற்போது மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என பிரிந்திருக்கும் இவ்வூர்கள் கல்வெட்டுகளில் முறையே மன்னுபெரும் பழுவூர், அவனிகந்தர்ப்பபுரம், சிறுபழுவூர் என குறிப்பிடப்படுகின்றன. இப்பழுவூர் மண்டலத்தை ஆண்டவாகளே பழுவேட்டரையர்கள்.
முதலாம் ஆதித்த சோழரின் (பொ.ஆ 871-907) காலத்தில் முதன்முறையாக வரலாற்றுப் பார்வைக்கு வரும் இவாகள் முதலாம் இராஜேந்திரரின் (பொ.ஆ1012-1044) ஆட்சிக்கால முதற்பகுதிவரை தொடர்கிறார்கள். இவர்கள் கேரள வழியினர் என்பர்.பழுவேட்டரையர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் மணஉறவு இருந்துள்ளது.
வளரும் அரசுக்கு, சுற்றிச் சூழ்ந்துள்ள சிற்றரசுகளின் அரவணைப்பு மிகத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டே, சோழர்கள் இது போன்ற மணவினைத் தொடர்புகளைத் தொடக்கத்திலிருந்தே மேற்கொண்டனர். பராந்தகர் மணந்து கொண்ட அருமொழிநங்கையின் தந்தை பழுவேட்டரையர்தான் .
இந்த வரலாற்றுப் பின்னணியுடன் பழுவூர் மரபின் தொடக்கத்தையும் முடிவையும் நோக்குகையில் ஓர் உண்மை தெளிவாகின்றது. சோழ, கேரளத் தொடர்புகள் வலிமையுடன் இருந்த காலத்தில் பழுவூர், பழுவேட்டைரையர்களின் ஆட்சியில் செழித்திருந்தது. சோழ, கேரள போர்களால் பகையான நிலையில், பழுவூர் மரபும் ஆட்சியினை இழந்திருக்கவேண்டும்.
நூறாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் மையப்பகுதியில் சோழர்களின் எழுச்சியோடு இணைந்து, வளர்ந்து, செழித்து, அவர்களோடு மணத்தொடர்புகளும் கொண்டு வாழ்ந்திருந்த பழுவூர் மரபு. அரியணை இழந்து, ஆட்சியிழந்து போனாலும் அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் கலைப் படைப்புகள் காலம் உள்ளளவும் பழுவேட்டரையர் மரபின் பெருமைகளைப் புலப்படுத்தி நிற்கும்.
பழுவூர்க் கோயில்கள்
அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்
மேலப்பழுவூருக்கும் கீழப்பழுவூருக்கும் இடையில் கீழையூரில் அமைந்துள்ள கோயில் வளாகத்தை இங்குள்ள கல்வெட்டுகள் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம் என்று குறிக்கின்றன. இவ்வளாகத்துள் இரண்டு மையக்கோயில்களும் ஓர் அம்மன் கோயிலும் ஐந்து சுற்றாலைத் திருமுன்களும் உள்ளன.
வளாகத்தின் வடபுறமுள்ள மையக்கோயில், கல்வெட்டுகளில் வடவாயில் திருகோயில் என்றும் தென்புறமுள்ள மையக்கோயில் தென்வாயில் திருகோயில் என்றும் அழைக்கப்படுகின்றன. முதலாம் ஆதித்த சோழர் காலத்திலிருந்து வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டுகளைக் கொண்டிருக்கும் இக்கோயில் வளாகம் தற்போது தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ்ப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக விளங்குகிறது. இங்குள்ள கட்டுமானங்களில் பெரும்பான்மையானவை பழுவேட்டரையர் காலத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்

மேலப்பழுவூரில் அமைந்துள்ள கோயில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. கோபுரவாயிலாலும் அதைத் தொடரும் திருமதிலாலும் சூழப்பட்ட இக்கோயில் வளாகத்திற்குள் சோழர் காலக் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் பகைவிடை ஈசுவரம், திருத்தோற்றமுடையார் கோயில், குலோத்துங்க சோழ ஈசுவரம் என்னும் மூன்று பெயர்களைத் தருகின்றன. இவற்றுள் மையக்கோயில் பட்டிகையில் காணப்படும் கல்வெட்டுகள் சுட்டும் பகைவிடை ஈசுவரமே இப்போது கந்தரேசுவரர் கோயிலாய்ப் பெயர் மாறி விளங்குகிறது. திருப்பணிகளுக்கு ஆளானபோதும் மையக்கோயிலின் கீழ்த்தளக் கட்டுமானம் ஏறத்தாழப் பழைய அமைப்பிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
போதிய கவனிப்பின்மையால் மெல்ல அழிந்துகொண்டிருக்கும் பழுவேட்டரையர் மரபின் கலைக்கொடைகளான இக்கோயில்களை முறையான பராமரிப்பின் கீழ்க் காப்பாற்றிப் போற்ற வேண்டியது சமூகப் பொறுப்புள்ள அனைவர்க்கும் கடமையாகும்.
இவ்விரண்டு கோயில்கள் மட்டுமல்லாமல் பழுவேட்டரையர்களின் மற்ற கோயில்களைப்பற்றியும் விரிவான விளக்கத்துடன் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்கள் பழுவூர் எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார். (நன்றி: முனைவர் இரா.கலைக்கோவன்)
- பாலா பாரதி
அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்

அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்

அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்



Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....