மால்பு

 வெள்ளரிக்கோம்பை பாறைஓவியங்களைக் காணச் சென்றிருந்தபோது அம்மலையில் மிக நீண்ட மூங்கில்கள் இரண்டு சாற்றி வைக்கப்பட்டிருந்தன. அவை தேனெடுப்பதற்காக குரும்பர் பழங்குடி மக்களால் வைக்கப்பட்டிருப்பததாகக் கூறினார்கள். நமக்கு வியப்பாக இருந்தது, ஏனெனில் சங்கஇலக்கியங்களில் கூறப்படும் மால்பு எனப்படும் இத்தகைய மூங்கில்கள் இன்றும் வழக்கில் உள்ளன. ஏணிகளில் கண்ணேணி, நூலேணி, படியேணி எனப்பலவகை உண்டு.

கண்ணேணி என்பது மூங்கில் கணுக்களிடையே கால்வைத்து ஏறுவது. நூலேணி என்பது நூலிலேயே ஏணிபோல் கட்டப்பட்டது. படியேணி என்பது இரு மூங்கில்களை இணையாக வைத்துக் கணுக்களுக்கு மேல் உள்பக்கம் துளையிட்டு வைப்பது.
மால்பு என்பது கண்ணேணி. ஒரு நீண்ட மூங்கிலில், அதன் கணுக்களில் கால்வைத்து ஏறத்தக்கதாக சிறிய முளைகளை இறுகத் தைத்து உருவாக்கிய ஒரு கால் ஏணி இது. மலைவாழ் மக்கள் இன்றைக்கும் இதுபோன்ற ஏணியைக் கொண்டு மிகவும் உயரமான மரங்களின் உச்சியில் தேனீக்கள் கட்டியிருக்கும் கூட்டிலிருந்து தேனை எடுப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர்.
இது சங்க இலக்கியங்களில் ‘மால்பு’ (Bamboo Lader) எனக் குறிக்கப்படுகிறது.
ஊயரமான மலைகளில் தேனெடுக்க ‘மால்பினைப் பயன்படுத்துவர் என்பது,
‘பெருந்தேன் கண்படு வரையில் முது மால்பு அறியாது ஏறிய மடவோன் போல’ – (குறுந்தொகை 273)
‘மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும்’ - (புறம் 105)
என்றும் இம்மால்பு நிலையாக இருக்கும் என்பது,
‘நெடுவரை, நிலைபெய்து இட்ட மால்பு நெறியாக பெரும் பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை’ - (மலை படுகடாம் 315 – 316)
என்றும் தினைப்புனத்தின் புகையால், ஒளிமங்கிய நிலவு தேனடை எனக்கருதி வேங்கை மரப்பரணிலிருந்து ஏணி அமைந்திருப்பர் என்பது
‘வானூர் மதியம் வரைசேரினவ்வனரைத், தேனி னிறாலென வேணி யிழைத்திருக்கும்’ - (கலித்தொகை 39)
என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இன்றும் மலைமக்கள் இம்மால்பைப் பயன்படுத்தித் தேனெடுப்பதைக் காணும்போது வியப்பாக உள்ளது.
- பாலா பாரதி

Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....