அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

 அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

“அன்பே . . .”
“ . . .”
“என்ன.. பேசமாட்டேன் என்கிறாயே கோபமா..?"
“ . . . "
“ சரி வா . . அங்கிருக்கும் புன்னை மரநிழலில் அமர்ந்து பேசலாம்”
“ஐயோ...அந்த மரத்திற்கு மட்டும் வேண்டாம்."
“ஏன், அந்த மரத்துக்கு என்ன?”
“அந்த மரம் எனக்கு அக்காள் முறை. அதனால்தான்..."
“என்ன... மரம் உனக்கு அக்காளா . ..? புரியவில்லையே..."
"அந்தப் புன்னை மரம், எனக்கு அக்காள் என்று எனது தாய்தான் கூறினாள்."
" புரியவில்லையே..."
" கிச்சுகிச்சு தாம்பாளம் எனும் விளையாட்டைத் தெரியுமா?”
“ஓ . . .தரையில் உட்கார்ந்துகொண்டு மணலை நீண்டவாக்கில் குவித்து புளியங்கொட்டையையோ சிறு கல்லையோ அம்மணலினுள் ஒளித்து வைத்துவிடுவாள் ஒருத்தி, மற்றவள் தனது கையால் ஒரு இடத்தை மூடிக்கொள்வாள்...
அந்த விளையாட்டுத்தானே . . ?”
“அதேதான், அவ்விளையாட்டை என்தாய் தனது தோழியுடன் விளையாடியபோது, மணலில் புன்னை மரக்கொட்டையொன்றை அவள் கண்டுபிடிக்கக் கூடாதென்று மணலில் சற்று ஆழமாக அழுத்தி வைத்துவிட்டு விளையாட்டு முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது மறந்து அக்கொட்டையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாளாம்.
மழைக்காலம் வந்தபோது, அக்கொட்டை புன்னை செடியாகத் துளிர்த்ததாம். அவளும், தினமும் அதைப் பார்த்து தனக்குக் கொடுக்கப்படும் பால், நெய் போன்றவற்றையெல்லாம் ஊற்றி அதை வளர்த்தாளாம். இப்போது
அப்புன்னை வளர்ந்து மரமாகி என்னைவிட உயரமாகி விட்டதாம்.
அம்மரம் என்னைவிட உயரமாக வளர்ந்துவிட்டதைக் கண்ட எனது தாய் இப்புன்னை மரம் உன்னைவிட உயர்ந்தது, அது உனக்கு அக்காள் என்று கூற, நானும் அன்று முதல் இம்மரத்தை எனது அக்காவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அக்காள் முன்னிலையில் பேச வெட்கமாக இருந்ததால் அம்மரத்துக்குக் கீழ்
வரத் தயங்கினேன்."
நற்றிணை 172 ஆம் பாடலில் நக்கீரனார் புன்னை மரத்தைக் குறிப்பிடுகிறார்.
“விளையாடு ஆயமொடு
வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே. . . “
புன்னை நெய்தல் நிலத்து மரம். அடர்ந்த பச்சை இலைகளையுடையது. இலை தடிப்பாக இருக்கும் வெண்மையான பூக்களையுடையது. நல்ல நறுமணம் கொண்ட இம்மரத்தின் பூ, மொட்டாக இருக்கும்போது முத்துப்போல இருக்கும். இம்மரத்தின் காய்கனியிலிருந்து எண்ணெய் எடுத்து விளக்கெரிக்கப் பயன்படுத்துவர்.
“மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த முடவுமுதிர் புன்னைத் தடவு நிலை மாச்சினை”.
அகநானூறு 10 . 2 , 3
புன்னை இலை குழந்தையின் பாதம்போல இருப்பதால், தற்காலத் திரைப்படப் பாடல்களில்
“புன்னை இலைபோலும் சின்னமணிப்பாதம்
மண்ணில் படக்கூடாது.”
எனக் கேட்டிருப்போம்.
“புன்னை வனப் பூங்குயிலே பூமகளே வா . . .
கன்னித்தமிழ் காவிரியே தேன்மொழியே வா . . . “
எனத் தற்காலத் திரைப்படங்களில் புன்னை மரம் குறித்தப்பாடல்களையும் இரசித்திருக்கிறோம்.
- பாலா பாரதி




Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....