Monday, 26 October 2015

பயணங்கள் முடிவதில்லை...அரிட்டாபட்டி

 மிக அரிதாகக் காணப்படும்'இலகுலீசர் சிற்பம்’ உங்கள் ஊருக்கருகே   உள்ளதே! அதைப் பார்க்கத்தான் வருகிறோம் என்று திரு.சுகவனமுருகனும்திரு.வீரராகவன் ஐயாவும் தொலைபேசியில் தெரிவித்தபோது

"இலகுலீசர் சிற்பமா?அதுவும் எங்கள் பகுதியிலா?எங்கே?"

வியப்புடன் வினவிய எனக்கு "அரிட்டாபட்டியிலும் பொன்னமராவதிக்கு அருகிலும் என்ற பதில் கிடைக்க மகிழ்சியுடன் தயாராகிவிட்டேன். காரணம் அரிட்டாபட்டிக்குப் போவதற்குப் பலமுறை முயன்று பயணம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்ததுதான். 

ஆமாம்! நாங்கள் அரிட்டாபட்டிக்கு போவதற்காகத் தயாரானோம்.
"சரி...இலகுலீசர் என்றால் யார்?"

சிவபெருமானின்64வடிவங்களில்28வதுவடிவமாக இருப்பவர் இலகுலீசர். சைவசமயத்தின் உட்பிரிவுகளான கபாலிகம்காளாமுகம்பாசுபதம்மாவிரதம்பைரவம்வாமம் ஆகிய ஆறு பிரிவுகளில் 'பாசுபதத்தைசேர்ந்தவர்கள் வணங்கும் தெய்வமாக விளங்குபவர் "இலகுலீசர்". அரிதாகவே காணப்படும் இலகுலீசர் சிற்பங்கள் தமிழகத்தில் அரிட்டாபட்டி குடைவரையிலும்,பொன்னமராவதி தேவர்மலை குடைவரையிலும் உள்ளது.
முதல் நாள் இரவே இருவரும் திருச்சிக்கு வந்துவிட,மறுநாள்(23-10-2015) தமிழகன் ஐயாவையும் அழைத்துக்கொண்டு நாங்கள் நால்வரும் எனது வாகனத்தில் மதுரையை நோக்கிப் பயணித்தோம்.
திருச்சிலிருந்து மேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்திருச்சியிலிருந்து 100 கிலோமீட்டர்கள் தொலைவிலும் மதுரையிலிருந்து  20 கிலோ மீட்டர்கள் தொலைவிலும்  உள்ள ஊரே அரிட்டாபட்டி ஆகும். சமணர்களின் ஆதிக்கத்திலிருந்தது இந்தப்பகுதி. சமணத்தீர்த்தங்கரர்களில் 22 வது தீர்த்தங்கரரானநேமிநாதர்'என்பவருக்குஅரிட்டநேமிஎன்றபெயர் இருந்ததனால்,இந்தஊருக்கு ‘அரிட்டநேமி’ என்றபெயர் இருந்ததனால், 'அரிட்டாபட்டிஎன்றுபெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். 2300வருடங்களுக்கு முந்தைய தமிழ்க்கல்வெட்டுகள்,குடைவரைக் கோயில்,ஏழாம் நூற்றாண்டுப் பாண்டியர் கல்வெட்டுகள்,பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகள்,ஜைன புடைப்புச் சிற்பம்,பதினாறாம் நூற்றாண்டு தாமிரச் செப்பேடு என்று வரலாற்றில் அனைத்து காலகட்டங்களிலும் அரிட்டாபட்டி இடம் பெற்றுள்ளது.

மதுரையைச் சுற்றி 'எண்குன்றங்கள்இருந்ததாகச் சொல்லப்படுகிறது,அவைபரங்குன்றம்,சமணர்மலை(திருவுருவகம்),பள்ளி(குரண்டிமலை),யானைமலை,இருங்குன்றம்(அழகர்மலை)நாகமலை(கொங்கர்புளியங்குளம்)அரிட்டாபட்டிமலை(திருப்பிணையன்மலை)கீழவளவுக்குன்றுஆகியவையாகஇருக்கலாம்.
இங்குள்ள சமனச் சிற்பத்தின் அடியில் காணப்படும் பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் பிறவியைக் கடக்கவுதவும் புணையாக(தெப்பமாக) இம்மலை விளங்கியது என்ற செய்தி உள்ளது. கல்வெட்டில் இம்மலை பிணையன்மலை என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது. புணையன்மலை என்பதே பிணையன்மலை என வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று திரு வெ.வேதாச்சலம் அவர்கள் கருதுகிறார்.திருபிணையன மலை என்ற பழம் பெயர் பெற்ற இம்மலை இப்போது ’கழிஞ்சமலை’ என்று அழைக்கப்படுகிறது.

அரிட்டாபட்டிக்குள் நுழைந்து இடப்புறம் திரும்பி சிறிதுதூரம் சென்ற நாங்கள் அங்குள்ள கண்மாய் ஒன்றின் முன்நின்றோம். அருகிலிருந்த 
பாறைக்கருகில் வாகனத்தை நிறுத்திவிட்டுநாங்கள் பார்க்கப்போகும் மலையைப்பார்த்தோம். ஏதிர்புறம் இரண்டு பகுதிகளாக மலை இருப்பது தெரிந்தது.

அங்குப் போக கண்மாயில் இறங்கித்தான் நடக்கவேண்டும். அன்று கண்மாயில் தண்ணீர் இருந்தது. முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி நடந்தோம். மலைகளுக்கு காவலாக உயரமான காவல் வீரர்கள் போன்று பனைமரங்கள் அணிவகுத்து நின்று எங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. ஏதோ இந்த மலையிலிருந்து நாங்கள் எதையோ நாங்கள் எடுத்துச் சென்றுவிடுவோமோ என்று எங்களைக் கண்கானித்துக் கொண்டிருந்தன.
 இக்கண்மாய்க்குஆணைக் கொண்டான் கம்மாய்என்று அங்கேயிருந்தவர்களிடமிருந்துத் தெரிந்து கொண்டோம். கொக்குகளும்,முக்குளிப்பான்களும்,சிலமனிதர்களும் மீன் பிடித்துக் கொண்டிருந்தததைப் பார்த்துக்கொண்டே நடந்தோம்.

 இக்கண்மாயில்13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் தெரிகிறது. இவ்விரண்டு மலைகளுக்குமிடையே நடந்து சென்றோம் வயல்வெளிகளையும்,தென்னந்தோப்புகளையும் கடந்து சென்றபின் வலதுபுறமுள்ள மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தோம். மேலேயுள்ள குடைவரைக் கோயிலுக்குத்தான் அந்தப் படிக்கட்டுகள் செல்கின்றன. இந்த குடைவரைக் கோயில் தமிழகத்  தொல்லியல்துறை பாதுகாப்பில் உள்ளது. இரும்புக் கைப்பிடிகளைப் பிடித்துக்கொண்டே ஏறினோம். மேலே சென்றதும் இனிமேல் உங்களுக்கு என் உதவி தேவையில்லை என இரும்புக் கைப்பிடிகள் விலகிக்கொள்ள கோயில் வாயிலில் நின்றோம்.
முற்காலப் பாண்டியர்களின் சிற்பக் கலைத் திறனுக்குச் சான்றாக விளங்கும் இக்கோயில் சிறுகருவறையும்,முன்மண்டபத்தையும் கொண்டுள்ளது. இந்த அழகான குடைவரைக் கோயில் கி.பி7-8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தற்போது இப்பகுதிமக்களால் "இடைச்சி மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கம் அதேபாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்மண்டபவெளிசுவரில் வலப்புறத்தில் விநாயகர் உருவமும்,இடப்புறத்தில் இலகுலீசர் எனும் சிவபெருமானின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலைப் பற்றிய விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளுமாறு தொல்லியல் துறையினர் கல்வெட்டுகளைஅமைத்துள்ளதுபாராட்டத்தக்கது. இங்குள்ள இலகுலீசர் சிற்பத்தை ஆய்வு செய்வதற்காகவே வீரராகவன்ஐயா வந்துள்ளமையால்,நாங்கள்அவரைஅங்கேயே விட்டுவிட்டு சமணர் படுக்கைக்கு அருகில் சந்திப்பதாகக் கூறி கோயிலைவிட்டு வெளியே வந்தோம்.

நாங்கள் போயிருந்தபோது அப்பகுதிகளில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சில இந்த இடைச்சி மண்டபத்தில் கூட்டம் நடத்த வந்திருந்தனர். மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் சிறிது நேரம் இருந்து உணவருந்திச் செல்லுமாரு கூறினார்கள். திட்டமிடப்பட்டதைவிட தாமதமாக நாங்கள் சென்றுகொண்டிருந்ததால் நன்றி கூறிவிட்டு கிளம்பினோம்.
குடைவரைக் கோயிலுக்கு வலப்புறம் சென்றால் அங்கு பெரிய ஆலமரமொன்றும் ஆலின் கீழ் சிறு கோயிலும் இருந்தது. இக்கோயில் உள்ளுர் மக்களின் வழிபாட்டில் இருப்பதை அங்கு வேண்டுதலுக்காகக் கட்டப்பட்டிருக்கும் மணிகள் உணர்த்தின. அருகே சில வீடுகளுடன் கூடிய குடியிருப்புப் பகுதியைக் காணமுடிந்தது.
இதற்கு மேல்உள்ள குகையில் சமணர் படுக்கை உள்ளது. இதை இப்பகுதிமக்கள் "பஞ்சபாண்டவர்" படுக்கை என்று அழைக்கின்றனர். மகாவீரர் சிற்பம் ஒன்றும் பழந்தமிழ்(பிராமி) கல்வெட்டும் அக்குகையில் உள்ளது.
குகையின் நெற்றிப் பகுதியில் உள்ள கல்வெட்டு பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.
1.நெல்வெளி இயசிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதொன்.
2.இலஞ்கிய் எளம்பேராதன் மகன் எமயவன் இவ்முழஉகை கொடுபிதவன்.
சங்ககாலப் பாண்டியார்களின் ஆதரவினால் இக்கற்படுக்கைகள் உருவாக்கப்பட்டமை இக்கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது.நெல்வேலிகிழவன்அதினன்வெளியன்என்பவன் இப்பள்ளியை உருவாக்கியதாக இக்கல்வெட்டு கூறுகிறது. இக்குகையின் வலப்புறத்தில் பாறையில் மகாவீரர் சிற்பமும் சிற்பத்தின் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டும் செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீதிருப்பிணையன் மலைப் பொற்கோட்டுக்கரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்த திருமேனி பாதிரிக்குடியார் ரஷை
என்று வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டிலிருந்து,
திருப்பிணையன் மலையில் இருந்து பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் இந்த வட்டெழுத்துக் கல்வெட்டின் மூலம் மகாவீரர் சிற்பத்தை உருவாக்கியவர்'அச்சணந்தி'என்பதும்,அருகில் உள்ள ஊரின் பெயர் பாதிரிகுடி என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பொ.ஆ9 - 10ஆம் நூற்றாண்டில் சமணம் மறுமலர்ச்சி பெற முயன்றவர் அச்சணந்தி முனிவர் என்று திரு சுகவன முருகன் கூறுகிறார்.
இங்குள்ள மகாவீரரின் சிற்பத்திற்கு மேல் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
இம்மலையிலுள் மற்றொரு சிறப்பு'ஊற்றுநீர்ப் பாசனம்’.இம்மலையின் சுனைகளில் வரும் நீரை அணைகட்டிச் சேமித்து அவ்வூர் மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். அந்த அணையைக்கான மேலே ஏறிச்சென்றோம்.
 
      2300ஆண்டுகளாகத் தொடாந்து வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டுவரும் இம்மலை தற்போதைய வரலாற்றிலும் அதாவது செய்தித்தாள்களிலும் செய்திகளிலும் இடம்பித்துள்ளது. இந்தமலையை அறுத்து கிரானைட் கற்களாய் வெளிநாடுகளுக்கு அனுப்ப,திட்டமிட்ட கும்பல் மலையை உடைப்பதற்கு இந்த அணைதடையாக இருந்ததைக்கண்டு இந்த அணையை அகற்றத்திட்டம் போட்டு ஒருநாள் இரவில் இவ்வணையை சிதைத்துள்ளனர். பொங்கியெழுந்த அரிட்டாபட்டி மக்கள் ஒன்றிணைந்து இப்பகுதியிலுள்ள மலைகளைப் பாதுகாக்க இயக்கமொன்றையும் தொடங்கி,நீதிமன்றத்தில் இம்மலையை உடைக்க தடையுத்தரவையும் பெற்றனர்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் நிரம்பிய மலையை உடைக்கக்கூடாது என்று ஒருவிழிப்புணர்வு சிந்தனை தூண்டப்பட்டது. காமராசர் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறையினரால் களஆய்வும் இப்பகுதியில் நடைபெற்றது.
இவ்வூரின் விவசாய பின்புலம் இம்மலையிலிருந்து பெறப்படும் நீர்வளத்தை கொண்டதாக இருப்பதால் இவர்கள் மலையின் மேல்அணையைக் கட்டியிருந்தனர். நீதிமன்றத்தில் தடையத்ததரவை பெற்றதன் மூலம் அரிட்டாபட்டி மக்கள் இந்த மலையை மட்டுமல்லாமல் அருகிலுள்ள மற்ற மலைகளையும் காப்பாற்றியுள்ளனர்.
போகும் வழியில் சில பாறைகளின் அமைப்பைப் பார்க்க வியப்பாக இருந்தது. எப்போது விழுமோ என்று பயத்துடனேயே அதைக்கடந்து சென்றோம். ஒருபாறையை இன்னொறு பாறையின்மீது எடுத்து வைத்தது போலஇருந்தது.
சிதைக்கப்பட்ட அந்த அணையையும் அருகில் தேங்கியிருந்த நீரைப்பார்க்கும்போது,மனிதனால் அறுக்கப்பட்டதால் மலை சிந்தியகண்ணீராகவே எனக்குத் தெரிந்தது. மலையை அறுக்க முயலும் ஒரு கூட்டம் அதைத் தடுக்க மற்றொரு கூட்டம்,யார் கை ஓங்குகிறதோ அதைப் பொறுத்துதான் இந்த மலையின் தலைவிதி அமையும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது மதுரை தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கி வருகிறது. மதுரையின் தொன்மைக்கு பாறைஓவியங்கள்,சங்கஇலக்கியங்கள்,பழந்தமிழ்கல்வெட்டுகள்,நாட்டுப்புறப்பால்கள் ஆகியவை சான்றுகளாகத் திகழ்கின்றன. மதுரை என்ற பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கிடாரிப்பட்டி,அணைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பழந்தமிழ்கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

...பாலா

பார்வை நூல்கள்
எண் பெருங்குன்றம் முனைவர் வெ.வேதாச்சலம் 
மதுரையில் சமணம்-முனைவர் சொ.சாந்தலிங்கம்.

2 comments:

  1. Excellent Informations to know a thorough about arittapatty

    ReplyDelete
  2. Excellent Informations to know a thorough about arittapatty

    ReplyDelete